லவ் ஜிகாத்திற்கு ஆதரவா... நயன்தாரா மீது வழக்குப்பதிவு...

நயன்தாரா, ஜெய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'அன்னபூர்ணி'. இது நயன்தாராவுக்கு 75ஆவது படமாகவும் அமைந்தது. நிலேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இருப்பினும் இத்திரைப்படம் எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பை திரையரங்குகளில் பெறவில்லை. வசூலும் சுமாராகவே இருந்தது. மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.

தொடர்ந்து அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸில் கடந்த டிச. 29ஆம் தேதி வெளியானது. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்பிளிகிஸில் இந்த படத்தை பார்க்கலாம். சமையல் குறித்து உருவான இந்த திரைப்படமானது ஓடிடி வெளியீட்டுக்கு பின் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் சில காட்சிகள் 'லவ் ஜிகாத்' என இந்துத்துவ அமைப்புகளால் கூறப்படும் இஸ்லாமிய மதமாற்றத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அன்னபூர்ணி திரைப்படம் லவ் ஜிஹாத்தை ஊக்குவிப்பதாக கூறி மும்பையில் உள்ள எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி படத்தின் ஒரு காட்சியில் நடிகர் ஜெய், ராமர் இறைச்சி உண்பவர் என்று கூறியதாகவும், இது மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் புகாரில் கூறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புகாரில் நயன்தாரா மட்டுமின்றி நடிகர் ஜெய், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா, தயாரிப்பாளர்கள் ஜத்தின் சேதி, ரவீந்திரன், புனித் கோனேகா, ஷாரிக் படேல், மோனிகா ஷெர்கில் (நெட்பிளிக்ஸ்) ஆகியோர் மீதும் புகார் வழங்கப்பட்டுள்ளது.

ஓடிடி வெளியீட்டிற்கு பின் இந்த திரைப்படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. வால்மீகியின் ராமாயணத்தை தவறாக சித்தரித்து ராமரை விமர்சித்ததாக இந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு மும்பை போலீசில் புகார் அளித்துள்ளது. இப்படத்தின் கதை, நாயகி சமையல்காரராக ஆசைப்படுகிறார், ஆனால் இந்து கோவில் பூஜாரியின் மகளாக இருப்பதால், அசைவ உணவு சமைப்பதில் பல சவால்களையும் போராட்டங்களையும் அவர் எதிர்கொள்கிறா்.


அப்போது சமையல் போட்டி ஒன்றில் நாயகி பங்கேற்கிறார், அப்போது தனது முன் தலையை தாவணியால் மூடிக்கொண்டு இஸ்லாமிய பிரார்த்தனையின்படி நமாஸ் செய்கிறார். சமைப்பதற்கு முன் நமாஸ் செய்ததால், பிரியாணி அசாதாரணமான சுவையாக அமைந்தது என நாயகியின் கல்லூரி தோழி ஒருவர் படத்தில் கூறியிருப்பார். கல்லூரி தோழி சொல்லியதை ஏற்று, சமையல் போட்டிக்கு முன்பு நாயகி நமாஸ் செய்து சமைக்க தொடங்குவார். இந்த காட்சி பலரது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியாகின.